ஏமாற்றுக்காரனும் ஒருநாள் ஏமாறுவான்

ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்று சொல்வார்கள். யாராவது வேண்டுமென்றே ஒருவரிடம் ஏமாற வேண்டும் என்ற தலையெழுத்தா இருக்கப்போகிறது. சூழ்ச்சி செய்து நயவஞ்சகமாக பேசி ஏமாற்றுபவர்களை எல்லா நேரத்திலும் கண்டுபிடிக்க முடியாது. பணமோ பொருளோ ஒருவரிம் கைப்பற்றுவதே அவர்கள் நோக்கமாக இருக்கும். ஆனால் தூய அன்பை மட்டுமே காட்ட தெரிந்த நல்லவர்களுக்கு இவர்களை கண்டுபிடிப்பது சற்று சிரமம் தான். அது என்னமோ இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை ஏதோ முட்டாள் தனமான காரியத்தை செய்து விட்டதை போலவும் அப்படிப்பட்ட சதிகாரர்களை புத்திசாலி போலவும் பார்க்கப்படுகிறது. ஏமாந்த பிறகு அவர்களிடமே நியாயம் கேட்டால் நீதிமான் போல பேச ஆரம்பித்து விடுவார்கள்.ஏமாந்தது உன் தப்பு என்னை குற்றம் சொல்கிறாயா என்று திட்டி அனுப்பி விடுவார்கள்.

பணமும் பொருளும் பறிபோன பிறகு இப்படி ஏமாந்து விட்டோமே என்ற வேதனனயோடு தான் சிலர் காலம் தள்ளுகிறார்கள் அதை மீட்க வேறு வழியே இல்லை என்று முடிவு செய்து விடுகிறார்கள். போனது திரும்ப கிடைக்கும்,அதற்கான வாய்ப்பு இன்னமும் இருக்கிறது என்கின்ற நம்பிக்கை மனதில் இருக்கும் வரை ஏமாந்தவர்கள் யாரும் ஏமாந்தவர்கள் அல்ல. ஒருவரை நம்ப வைத்து அன்பாக.இருப்பதை போல் நடித்து ஏமாற்றி பறிக்கும் கெட்டவனுக்கே ஒரு வழி இருக்கும்போது அதை மீட்க நல்லவருக்கு மட்டும் ஏன் ஒரு கூட வழி இல்லாமல் போகும்



சில வருடங்களுக்கு முன் நண்பன் ஒருவன் தன்னோட டிவிடி பிளையர் ரிப்பேர் ஆச்சுனு அதை எடுத்துக்கொண்டு பஜாருக்கு போனான். அங்கே போனால் ரிப்பேர் பார்த்து கையோடு வாங்கிட்டு வந்து விடலாம் என்று நினைத்து கொடுத்தான் கடைக்காரரும் அதை பிரித்து சிறிது நேரம் பார்த்து விட்டு தம்பி ரிப்பேர் நிறையா இருக்கு நீங்க ரெண்டு நாள் கழித்து வாங்க பார்த்து வைக்கிறேன் என்றார். அவனும் சரியென்று வெறுங்கையோடு திரும்பி வந்தான். ரெண்டுநாள் கழித்து போனபோது அவர் திரும்பவும் வேற எதையாவது சொல்லி அனுப்ப இப்படியே ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. அவனுக்கு தான் ஏமாந்து வருகிறோம் என்று தெரியவே நீங்க ரிப்பேர் பார்க்க கூட வேண்டாம் சிடிய கொடுங்க என்றாலும் இல்ல ரிப்பேர் பார்த்தே தர்றேன். என்று கூறுவார்

கடைசியாக என்னையும் அழைத்துக்கொண்டு அந்த கடைக்கு போனான். இந்த முறை அவர் வழக்கமாக சொன்னதையே சொல்லாமல் சிடியை தூக்கி வைத்துவிட்டு ரிப்பேர் பார்க்க அதிக செலவாகும் நீங்க எடுத்துட்டு போங்க என்றார். அதை பார்த்ததும் அவனுக்கு அதிர்ச்சி அது அவனுடையதே அல்ல. எங்கையோ குப்பையில் இருந்து எடுத்துட்டு வந்த மாதிரி அதுல ஏகப்பட்ட பொருள்கள் இல்லை. நாங்க சொல்லி பார்த்தாலும் அவர் கேட்கவில்லை இதுதாம்பா உங்க சிடி வாங்கிய எனக்கு தெரியாதா என்றார்.நண்பனுடைய பொருளை விற்று விட்டார் என்பது புரிந்தது. இப்படி ஏமாற்றி விட்டாரே என்று நினைக்கும் போது வருத்தம் ஏற்பட்டது அப்போது எனக்கொரு யோசனை தோன்றியது.அவர் வைத்திருப்பது தனி கடையாக இல்லை அது கட்டிடத்தின் ஒரு பகுதி.  உள்ளே சிலபேர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நான் நண்பனை அழைத்துக்கொண்டு அவர்களை நோக்கி உள்ளே சென்றேன். அவரும் இவங்க எதுக்கு போறாங்க என்று பதற்றத்தோடு எங்கள் பின்னால் வந்தார்.

அது அந்த பகுதி சங்க கட்டிடம் தலைவரும் இருந்தார் நாங்கள் அவர்களிடம் அந்த ரிப்பேர் பார்ப்பவரை காட்டி நடந்த அணைத்ததையும் கூறவே அவர்கள் அவரை முறைத்து பார்த்தனர் பிறகு எங்களை பார்த்து அவர் ரிப்பேர் பார்த்து கொடுப்பார்.அப்படி இல்லைனா எங்ககிட்ட வந்து சொல்லுங்க என்றனர்
கடைக்காரர் பயந்துகொண்டே எங்களை அழைத்து வெளியே வந்து இப்படி மாட்டி விட்டுட்டிங்களே புலம்பினார். பிறகு இருங்க வர்றேன் என்று சொல்லி போனவர் ஒரு புது சிடியோடு வந்தார். ஆனாலும் பாவம் இதற்காக அவர் செலவலித்தது அதிகம் என்று தோன்றவே ரிப்பேருக்கு ஆகவேண்டிய தொகையை கொடுத்து விட்டே கிளம்பினோம்
இப்படி ஏமாற்றுபவர்களிடம் போய் கேட்டால் எதுவும் நடக்காது திமிராகத் தான் பேசுவார்கள். ஆனால் அவர்களே பயந்து நடுங்கும் அளவுக்கு அவருக்கு பின்னால் நிச்சயம் ஒருவர் இருப்பார். அதை கண்டுபிடித்து முயன்றால் ஏமாற்றங்களை பெருமளவு குறைக்கலாம்

Comments

Popular posts from this blog

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

தமிழ்சினிமா நினைவலைகள்

இனிய பயண வாகனம்